திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.18 திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும் அறிவல ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.
1
தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.
2
ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.
3
பண்ணின் இம்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே.
4
மறைகொண் டமனத் தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.
5
நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப்
பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி அரனுறை கின்றதே.
6
அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளோத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நிறைமட நெஞ்சமே.
7
பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந் தீவினை நாசமே.
8
பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.
9
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com